Daily Catholic Reflections Catholic Leaf Visit Now!

Holy Friday: Full Liturgy of the Eucharist in Tamil

Hi Guy Here I present to the procedure that we have to follow on the day of Holy Friday. Holy Friday is the day our Lord Jesus Christ suffered and

பாடுகளின் வெள்ளி வழிபாட்டு நடைமுறை 

Holy Friday: Full Liturgy of the Eucharist in Tamil

 Hi Guy Here I present to the procedure that we have to follow on the day of Holy Friday. Holy Friday is the day our Lord Jesus Christ suffered and died. We commemorate this day as a day of sorrow. May this day be a fruitful day. Procedure for Holy Friday in tamil is here below. You are free to download and use it for you celebration meaningfully.

On Holy Friday, we remember the day that Jesus Christ was crucified. This was the day that He sacrificed His life for our sins. We reflect on His suffering and death, and we give thanks for His great love for us. We also ask for His forgiveness and mercy.

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி

1. மிகப் பழமையான மரபுப் படி , திரு அவை இன்றும் நாளையும் ஒப்புரவு, 'நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைத் தவிர மற்ற அருளடையாளங்களை 'எச் சூழலிலும் கொண்டாடுவதில்லை.

2. இந்நாளில் ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டத்தின் போது மட்டும்தான் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும். இக்கொண்டாட்டத்தில் பங்குபெற இயலாது நோயாளிகளுக்கு இந்நாளின் எந்நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.

3. சிலுவை, திரிகள், பீடத் துகில் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் முழுவதும் வெறுமையாக இருக்கும்.

ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம்

4. இன்று பிற்பகலில் குறிப்பாக மூன்று மணி அளவில் பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் அருள் பணி நலன் கருதித் தேவைக்கு ஏற்ப, இதற்குப் பிந்திய நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

5. திருப்பலிக்கு உரிய சிவப்பு நிற உடைகள் அணிந்து அருள் பணியாளரும் திருத்தொண்டர் இருந்தால், அவரும் அமைதியுடன் பீடத்தின் முன் வந்து, பீடத்துக்கு வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுவார்கள் அல்லது பொருத்தமானால் முழங்கால் பணிந்து சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவார்கள்; மற்ற அனைவரும் முழங்காலில் இருப்பர்.

6. பின் அருள்பணியாளர் பணியாளர்களுடன் தமது இருக்கைக்குச் செல்கின்றார். அங்கு அருள் பணியாளர் மக்களை நோக்கி நின்று, தம் கைகளை விரித்துக் கீழுள்ள மன்றாட்டுகளுள் ஒன்றை மன்றாடு வோமாக எனும் அழைப்புச் சொல்லைத் தவிர்த்துவிட்டுச் சொல்கின்றார்:

மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகன் கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தி, உம் அடியார்களுக்காகப் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்படுத்தினார்; உமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நிலையான பாதுகாப்பால் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

அல்லது

இறைவா, பழைய பாவத்தின் விளைவாக எல்லாத் தலைமுறைக்கும் தொடர்ந்த சாவை எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய கிறிஸ்துவின் பாடுகளால் அழித்தீர்; இவ்வுலக மனிதரின் சாயலை இயற்கையின் நியதியால் பெற்றுள்ளது போல நாங்கள் அவருக்கு ஏற்றவர்களாய் இருப்பதால் விண்ணகத்தின் சாயலை உமது அருளின் புனிதத்தால் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

முதல் பகுதி

இறைவாக்கு வழிபாடு

7. பின்னர் அனைவரும் அமர்ந்திருக்க, எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து (52:13-53:12) முதல் வாசகமும் அதற்கு உரிய திருப்பாடலும் வாசிக்கப்படும்.

8. எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து (4:14-15; 5:7-9) இரண்டாம் வாசகம் தொடரும். பிறகு நற்செய்திக்கு முன் வசனம் பாடப்படும்.

9. பிறகு முந்திய ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது போல், யோவான் எழுதியபடி ஆண்டவருடைய பாடுகளின் வரலாறு (18:1-19:42) வாசிக்கப்படும்.

புனித வெள்ளி வாசகங்கள்

முதல் வாசகம்

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 13 - 53: 12

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர். நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

இளந்தளிர்போலும் வறண்ட நில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்துகொள்வார்.

ஆதலால், நான்அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் 

திபா 31: 1,5. 11-12. 14-15. 16,24 (பல்லவி: லூக் 23: 46)

பல்லவி: “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.”

1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்;
நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்;
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்;
வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே,
நீர் என்னை மீட்டருளினீர்.- பல்லவி

11 என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்;
என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்;
என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்;
என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.
12 இறந்தோர்போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்;
உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.- பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்;
‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.
15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது;
என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின்
கையினின்றும் என்னை விடுவித்தருளும்.- பல்லவி

16 உமது முகத்தின் ஒளி அடியேன்மீது வீசும்படி செய்யும்;
உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
24 ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே,
நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். -பல்லவி

(அல்லது)

தியானப்பாடல்

திருப்பாடல் 31: 2,6 12-13, 15-16, 17, 25

பல்லவி: தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்

ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்
ஒருநாளும் வெட்கம் அடைய விடாதேயும்
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்
வாக்கு பிறழாத இறைவனாகிய ஆண்டரே
நீர் என்னை மீட்டருளினிர்

என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்
என்னை அடுத்திருப்போரின் பேரழிவுக்கு ஆளானேன்
என் அன்பர்களுக்கு பேரச்சம் வருவித்தேன்
என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்
இறந்தோர் போல் நான் நினைவிலிருந்து அகற்றப்பட்டேன்
உடைந்து போன மட்கலம் போலானேன்

ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்
நீரே என் கடவுள் என்று சொன்னேன்
என் வாழ்வின் ஒவ்வொறு கட்டமும் உமது கையில் உள்ளது
என் எதிரிகளின் கையினின்றும் என்னைத்
துன்புறுத்துவோரின் கையினின்றும்
என்னை விடுவித்தருளும்

உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்
உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்
ஆண்டவக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே
நீங்கள் அனைவரும் உள்ளத்தில்
வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்

இரண்டாம் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும்
என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16;5: 7-9

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம் 

பிலி 2: 8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி வாசகம்

குருத்து ஞாயிறன்று நடைபெற்றதுபோல், ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும். (காண்க: திருப்பலிப் புத்தகம், பக்கம் 103, எண் 22)

யோவான் 18:1 - 19:42

விரிஉரையாளர்: புனித யோவான் எழுதியபடி யேசுவின் திருப்பாடுகள்:

விரிஉரையாளர்: இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர். படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று,

இயேசு: "யாரைத் தேடுகிறீர்கள்?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக,

மக்கள்: "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். இயேசு,

இயேசு: "நான்தான்"

விரிஉரையாளர்: என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான். "நான்தான்" என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.

இயேசு: "யாரைத் தேடுகிறீர்கள்?"

விரிஉரையாளர்: என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள்,

மக்கள்: "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து,

இயேசு: "'நான்தான் ' என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்"

விரிஉரையாளர்: என்றார். "நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை" என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது. சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம்,

இயேசு: "வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?"

விரிஉரையாளர்: என்றார். படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார். இந்தக் கயபாதான், "ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர். சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார். பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார். வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம்,

பணிப்பெண்: "நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். பேதுரு,

பேதுரு: "இல்லை"

விரிஉரையாளர்: என்றார். அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீமூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள்.

விரிஉரையாளர்: தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து,

இயேசு: "நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே"

விரிஉரையாளர்: என்றார். அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர்,

காவலர்: "தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?"

விரிஉரையாளர்: என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். இயேசு அவரிடம்,

இயேசு: "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார். சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம்,

மக்கள்: "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே"

விரிஉரையாளர்: என்று கேட்டனர். அவர்

பேதுரு: "இல்லை"

விரிஉரையாளர்: என்று மறுதலித்தார். தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர்,

பணியாளர்: "நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர். பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று. அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை. எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து,

பிலாத்து: "நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதற்கு அவர்கள்,

மக்கள்: "இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்"

விரிஉரையாளர்: என்றார். யூதர்கள் அவரிடம்,

மக்கள்: "சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது"

விரிஉரையாளர்: என்றார்கள். இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள். பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம்,

பிலாத்து: "நீ யூதரின் அரசனா?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதற்கு பிலாத்து,

பிலாத்து: "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல"

விரிஉரையாளர்: என்றார். பிலாத்து அவரிடம்,

பிலாத்து: "அப்படியானால் நீ அரசன்தானோ?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்கு இயேசு,

இயேசு: "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்"

விரிஉரையாளர்: என்றார். பிலாத்து அவரிடம்,

பிலாத்து: "உண்மையா? அது என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று,

பிலாத்து: "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே"

விரிஉரையாளர்: என்றான். மேலும்,

பிலாத்து: "பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்கு அவர்கள்,

மக்கள்: "இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்"

விரிஉரையாளர்: என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.

விரிஉரையாளர்: பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து,

மக்கள்: "யூதரின் அரசே வாழ்க!"

விரிஉரையாளர்: என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம்,

பிலாத்து: "அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்;துகொள்ளுங்கள்"

விரிஉரையாளர்: என்றான். இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "இதோ! மனிதன்"

விரிஉரையாளர்: என்றான். அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும்,

மக்கள்: "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்"

விரிஉரையாளர்: என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை"

விரிஉரையாளர்: என்றான். யூதர்கள் அவரைப் பார்த்து,

மக்கள்: "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்"

விரிஉரையாளர்: என்றனர். பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான். அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம்,

பிலாத்து: "நீ எங்கிருந்து வந்தவன்?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து,

பிலாத்து: "என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?"

விரிஉரையாளர்: என்றான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்"

விரிஉரையாளர்: என்றார். அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான். ஆனால் யூதர்கள்,

மக்கள்: "நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி"

விரிஉரையாளர்: என்றார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். "கல்தளம்" என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் "கபதா" என்பது பெயர். அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம்,

பிலாத்து: "இதோ, உங்கள் அரசன்!"

விரிஉரையாளர்: என்றான். அவர்கள்,

மக்கள்: "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்"

விரிஉரையாளர்: என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள்,

தலைமைக்குருக்கள்: "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை"

விரிஉரையாளர்: என்றார்கள். அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம்,

குருக்கள்: "'யூதரின் அரசன் ' என்று எழுத வேண்டாம்; மாறாக, "யூதரின் அரசன் நான்" என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்"

விரிஉரையாளர்: என்று கேட்டுக்கொண்டார்கள். பிலாத்து அவர்களைப் பார்த்து,

பிலாத்து: "நான் எழுதியது எழுதியதே"

விரிஉரையாளர்: என்றான்.

விரிஉரையாளர்: இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி,

படைவீரர்: "அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். "என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம்,

இயேசு: "அம்மா, இவரே உம் மகன்"

விரிஉரையாளர்: என்றார். பின்னர் தம் சீடரிடம்,

இயேசு: "இவரே உம் தாய்"

விரிஉரையாளர்: என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு,

இயேசு: "தாகமாய் இருக்கிறது"

விரிஉரையாளர்: என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள் அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு,

இயேசு: "எல்லாம் நிறைவேறிற்று"

விரிஉரையாளர்: என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

(அனைவரும் முழந்தாள் படியிட்டு மெளனமாக ஜெபிக்கவும்)

விரிஉரையாளர்: அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். "எந்த எலும்பும் முறிபடாது" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்" என்றும் மறைநூல் கூறுகிறது. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகக் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

10. ஆண்டவருடைய பாடுகளின் வாசகத்துக்குப் பிறகு அருள்பணியாளர் சுருக்கமாக மறையுரை ஆற்றுகின்றார். அதன் இறுதியில் சிறிது நேரம் அமைதியாக மன்றாட அருள்பணியாளர் மக்களை அழைக்கலாம்.

பொது மன்றாட்டு

11. இறைவாக்கு வழிபாடு பொது மன்றாட்டுடன் முடிவடையும். அது நடைபெறும் முறையாவது : திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - ஒரு பொது நிலைப் பணியாளர் வாசக மேடையில் நின்றுகொண்டு, பின்வரும் மன்றாட்டின் கருததை அறிவிக்கின்றார். அனைவரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடுகின்றனர். பின் அருள் பணியாளர் தம் இருக்கையில் அல்லது தேவையானால் பீடத்துக்கு அருகில் நின்றுகொண்டு, தம் கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்கின்றார்.

இம்மன்றாட்டின் முழு நேரமும் அல்லது ஒரு பகுதியின்போது மக்கள் முழங்காலில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.

12. அருள் பணியாளரின் மன்றாட்டுக்குமுன், மரபுப்படி, இறைமக்களுக்கு? திருத்தொண்டா: முழங்காலிடுவோம் - "எழுந்திருங்கள் எனும் அழைப்பு விடுக்கலாம்: எல்லாரும் முழங்காலிடும்போது சிறிது நேரம் அமைதியாக மன்றாடுகின்றனர்.

13. அருள்பணியாளரின் மன்றாட்டைத் தொடங்கத் தேவையான மற்றக் கருத்துகளை் ஆயர் பேரவைகள் வழங்கலாம்.

1. புனிதத் திரு அவைக்காக

மன்றாட்டு எளிமையான இராகத்தில் பாடப்படுகின்றது; அல்லது அழைப்புகள் "முழங்காலிடுவோம்" - "எழுந்திருங்கள்" எனச் சொல்லும்பொழுது அவை ஆடம்பரமாகப் பாடப்படும்,

அன்பு மிக்க சகோதர சகோதரிகளே, இறைவனின் புனிதத்
திரு அவைக்காக மன் றாடுவோம்: நம் இறைவனும் ஆண்டவருமானவர் உலகெங்கும் திரு அவைக்கு அமைதியும் ஒற்றுமையும் பாதுகாப்பும் அளித்துக் காக்க வேண்டும் எனவும், நாம் கலக்கம் இன்றி, அ மை தியான வாழ்வு நடத்தி எல்லாம் வல்ல இறைத் தந்தையை மாட்சிப்படுத்த நமக்கு அருள்புரிய வேண்டும் எனவும் மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
கிறிஸ்துவில் உமது மாட்சியை மக்கள் இனங்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்; உம்முடைய இரக்கத்தின் செயல்களை நீர் பாதுகாப்பதால் உலகெங்கும் பரவியிருக்கும் திரு அவை,
உறுதியான நம்பிக்கையுடன் உமது பெயரை
அறிக்கையிடுவதில் நிலைத்திருக்கச் செய்வீராக. 

எங் கள் பதில்: ஆமென்.

II. திருத்தந்தைக்காக

நம் புனிதத் திருத்தந்தை பெயர்) .... க்காக மன்றாடுவோம்: தலைமை ஆயர் நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனும் ஆண்டவருமானவர் எவ்வகைத் தீங்கும் இன்றி அவரைப் பேணிக்காப்பாராக. அதனால் அவர் இறைவனின் புனித மக்களை வழிநடத்தித் தம்முடைய புனிதத் திரு அவையை வளம் பெறச் செய்ய வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உமது திட்டப்படியே அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன;
அதனால் உமது அதிகாரத்தால் ஆளப்படும்
கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டலைப் பரிவிரக்கத்துடன் கண்ணோக்கியருளும்:
திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் நம்பிக்கையில் வளரும்படி
அவரைப் பரிவுடன் காத்தருள்வீராக. 

எங்கள் பதில்: ஆமென்.

III. திருநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளருள் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்காக

நம் ஆயர்(பெயர்)*... க்காகவும், திரு அவையில் உள்ள எல்லா ஆயர்கள்,
* உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை எண் 149-இல் குறிப்பிட்டுள்ளவாறு இணையுதவி ஆயா அல்லது துணை ஆயரின் பெயர்களையும் இங்குச் சொல்லலாம்
அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், நம்பிக்கையாளர் ஆகிய
அனைவருக்காகவும் மன்றாடுவோமாக:

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய ஆவியாரால் திரு அவை முழுவதும் அர்ச்சிக்கப்பெற்று, ஆளப்படுகின்றது; உம்முடைய திருநிலைப் பணியாளர்கள் அனைவருக்காகவும் நாங்கள் செய்யும் வேண்டலைக் கேட்டருளும்: அதனால் எல்லா நிலையினரும் உமது அருள்கொடையால் உமக்கு உண்மையுடன் ஊழியம் புரிவார்களாக. 

எங்கள் பதில்: ஆமென்.

IV. கிறிஸ்தவப் புகுமுக நிலையினருக்காக

கிறிஸ்தவப் புகுமுகநிலையினருக்காகவும் மன்றாடுவோம்: அதனால்
நம் இறைவனும் ஆண்டவருமானவர் தமது இரக்கத்தைப் பொழிந்து
அவர்களுடைய இதயங்களின் செவிகளைத் திறந்து விடுவாராக;
இவ்வாறு அவர்கள், புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால், தங்கள்
பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு அடைந்து, நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவோடு ஒன்றிணைய வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, புதிய மக்களைச் சேர்த்துத் திரு அவை என்றும் வளம் பெறச் செய்கின்றீர்; கிறிஸ்தவப் புகுமுகநிலையினரிடம் நம்பிக்கையும் அறிவும் வளரச் செய்தருளும்: அதனால் அவர்கள் திருமுழுக்குத் தண்ணீரால் புதுப் பிறப்பு அடைந்து, தேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின் திருக்கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களாக. 

எங்கள் பதில்: ஆமென்.

V கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக

கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள் அனைவருக்காகவும் மன்றாடுவோம்: நம் இறைவனும் ஆண்டவருமானவர் அவர்களை உண்மையின் பாதையில் வழிநடத்தித் தமது ஒரே திரு அவையில் கூட்டிச் சேர்த்துக் காத்தருள வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, சிதறுண்டவர்களை ஒன்றுசேர்ப்பவரும் ஒருங்கிணைந்தவற்றைப் பேணிக் காப்பவரும் நீரே; உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்: இவ்வாறு ஒரே திருமுழுக்கினால் தூய்மைப்படுத்திய அவர்களை நம்பிக்கையின் முழுமையால் இணைத்து, அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்ப்பீராக. 

எங்கள் பதில்: ஆமென்.

VI. யூத மக்களுக்காக

யூத மக்களுக்காகவும் மன்றாடுவோம்: முற்காலத்தில் அவர்களோடு
பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர், த ம து பெயரின் மீதுள்ள
அன்பிலும் தமது உடன்படிக்கைமீதுள்ள நம்பிக்கையிலும் அவர்களை வளர்ச்சி அடையச் செய்தருள வேண்டும் என மன்றாடுவோம்"

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, ஆபிரகாமுக்கும் அவர்தம் வழிமரபினருக்கும் நீர் உம் வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்; அதனால் முதன்முதலாக நீர் தேர்ந்து கொண்ட இம்மக்கள் உமது மீட்பின் நிறைவைப் பெற்றுக்கொள்ள உமது திரு அவையின் வேண்டலுக்குக் கனிவாய்ச் செவிசாய்ப்பீராக. 

எங்கள் பதில்: ஆமென்.

VII. கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காக

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்: தூய ஆவியாரின் ஒளியைப் பெற்று, அவர்களும் மீட்புப் பாதைக்கு வந்துசேர வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத மக்கள் உம் திருமுன் நேர்மையான இதயத்தோடு நடந்து, உண்மையைக் கண்டடைவார்களாக. நாங்களும் ஒருவர் மற்றவர் மீது எப்போதும் அன்பு கொள்வதாலும்
உமது வாழ்வின் மறையுண்மையை மேன்மேலும் புரிந்து கொள்வதில் ஆவல் கொள்வதாலும் உமது அன்பை இவ்வுலகில் மிகத் தெளிவாகக் காட்டும் சாட்சிகளாய் விளங்கச் செய்வீராக. 

எங்கள் பதில்: ஆமென்.

VIII. கடவுளை நம்பாதவர்களுக்காக

கடவுளைக் கண்டறிய முடியாது என்பவர்களுக்காகவும் மன்றாடுவோம்.அவர்கள் நேர்மையான இதயத்தோடு நன்னெறியில் வாழ்ந்து, கடவுளைக் கண்டடையுமாறு மன் றா டு வோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, மனிதர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவும், உம்மைக் கண்டடைவதால் அமைதி பெறவுமே நீர் அவர்களைப் படைத்தீர்; அதனால் இவ்வுலகில் ஏற்படும் எல்லாவிதத் தீங்கு விளைவிக்கும் இடையூறுகளுக்கு நடுவிலும் அவர்கள் அனைவரும் உமது பரிவிரக்கத்தின் அறிகுறிகளையும், உம்மை நம்புவோர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையும் கண்டுணர்வார்களாக; இவ்வாறு உம்மையே தங்களின் ஒரே மெய்யான கடவுள் எனவும் மக்களின் தந்தை எனவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளச் செய்வீராக.

எங்கள் பதில்: ஆமென்.

IX. நாடுகளை ஆள்வோருக்காக

நாடுகளை ஆளும் அனைவருக்காகவும் மன்றாடுவோம்: நம் இறைவனும் ஆண்டவருமானவர் தமது திருவுளப்படி உண்மையான அமைதியும் உரி மை வாழ்வும் அவர்கள் பெறும்பொருட்டு, அவர்களுடைய மனங்களையும் இதயங்களையும் வழிநடத்த வேண்டும் என மன் றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, மனிதரின் இதயங்களும் அவர்களின் உரிமைகளும் உம் கையில் உள்ளன; உலகெங்கும் மக்களின் வளமான வாழ்வும் அமைதியின் உறுதிப்பாடும் சமய உரிமையும் உமது கொடையால் நிலைபெறுமாறு எங்களை ஆள்வோரைக் கனிவுடன் கண்ணோக்குவீராக. 

எங்கள் பதில்: ஆமென்.

X. துன்புறுவோருக்காக

அன்பு மிக்க சகோதர சகோதரிகளே, துன்புறும் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளிடம் மன்றாடுவோம்: தவறுகள் அனைத்திலிருந்தும் உலகைத் தூய்மைப்படுத்தவும் பிணிகள் நீங்கி, பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், ப ய ணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர்கள் மீட்புப் பெறவும் வேண்டும் எ ன மன் றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, துயருறுவோருக்கு ஆறுதலும், வருந்துவோருக்குத் திடனும் நீரே; எத்தகைய துன்ப வேளையிலும் உம்மை நோக்கிக் கூவி அழைப்போரின் வேண்டல்கள் உம் திருமுன் வருவனவாக: அதனால் தங்கள் தேவைகளில் நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு அவர்கள் எல்லாரும் மகிழ்வார்களாக. 

எங்கள் பதில்: ஆமென்.

இரண்டாம் பகுதி 

திருச்சிலுவை ஆராதனை

14. பொது மன்றாட்டு முடிந்தபின், திருச்சிலுவைச் சிறப்பு ஆராதனை நடைபெறும். திருச்சிலுவையைக் காட்ட இரு வகைகள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் பொருத்தமான ஒன்றை, மக்களின் அருள் பணி நலனுக்கு ஏற்றவாறு தேர்ந்து கொள்ளலாம்.

திருச்சிலுவையை உயர்த்திக் காட்டுதல்

முதல் வகை

15. பணியாளர்களோடு அல்லது தகுதியான மற்றொரு பணியாளரோடு திருத்தொண்டர் திருப்பொருள் அறைக்குச் செல்கின்றார். அங்கிருந்து எரியும் திரிகள் ஏந்திய இரு பணியாளர்களோடு அவர் ஊதா நிறத் துகிலால் மூடப்பட்ட சிலுவையை ஏந்தி, கோவில் வழியாகத் திருப்பீட முற்றத்தின் நடுப்பகுதிக்குப் பவனியாக வருகின்றார்.

பீடத்தின் முன் மக்களை நோக்கி நிற்கும் அருள்பணியாளர் சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றி, அதை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, "திருச்சிலுவை மரம் இதோ எனும் பாடலைத் தொடங்குகின்றார். பின்வரும் சொற்களைத் திருத்தொண்டர் அல்லது தேவையானால் பாடகர் குழு அவருடன் பாடுகின்றார்கள். மக்கள் எல்லாரும், "வருவீர் ஆராதிப்போம் எனப் பதிலுரைக்கின்றார்கள். பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் சிலுவையைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்க, அனைவரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றார்கள்.

திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு.

பதில்: வருவீர் ஆராதிப்போம்.

பின் அருள்பணியாளர் சிலுவையின் வலக் கையில் உள்ள துகிலை அகற்றி, மீண்டும் " -யாத்திப் பிடித்துக்கொண்டு, "திருச்சிலுவை மரம் இதோ" எனப் பாடுகின்றார். மற்ற அனைத்தும் முன்பு போல நடைபெறும்.

இறுதியாக, அருள்பணியாளர் சிலுவையின் துகிலை முற்றிலும் அகற்றிவிட்டு, சிலுவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, "திருச்சிலுவை மரம் இதோ" என மூன்றாம் (முறை பாடுகின்றார். மற்றவை முன்பு போல நடைபெறும்.

மற்றொரு வகை

16. பணியாளர்களோடு அல்லது தகுதியான பணியாளர் ஒருவரோடு அருள்பணியாளரோ திருத்தொண்டரோ கோவிலின் தலைவாயிலுக்குச் செல்கின்றார். அங்கே மூடப்படாத சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். பணியாளர்கள் எரியும் திரிகளைப் பிடித்துக் கொள்கின்றனர். அங்கிருந்து பவனி கோவில் வழியாகப் பீடத்துக்கு வருகின்றது. வாயில் அருகே, கோவிலின் நடுவில், திருப்பீட முற்றத்துக்குமுன் ஆகிய மூன்று இடங் களில் சிலுவை தாங்குவோர் நின்று சிலுவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, "திருச்சிலுவை மரம் இதோ" எனப் பாட, இதற்குப் பதிலுரையாக எல்லாரும், "வருவீர் ஆராதிப்போம்" எனப் பாடுகின்றனர். முன்பு கூறியபடி ஒவ்வொரு பதிலுரைக்குப் பின்னும் எல்லாரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றனர்.

திருச்சிலுவை ஆராதனை

17. பின்பு, எரியும் திரிகள் தாங்கிய இரு பணியாளர்களோடு கூடிவர, அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் சிலுவையைத் திருப்பீட முற்றத்தின் வாயிலுக்கு அல்லது வேறு வசதியான இடத்துக்குக் கொண்டு செல்கின்றார். அதை அங்கே கிடத்துகின்றார் அல்லது பணியாளர்கள் பிடித்துக்கொள்ளக் கொடுக்கின்றார். சிலுவையின் இரு புறமும் திரிகள் வைக்கப்படும்.

18. சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருப்பலி உடையையும் காலணிகளையும் கழற்றிவிட்டு, தலைமை ஏற்கும் அருள்பணியாளர் மட்டும் சிலுவைக்கு ஆராதனை செலுத்த முதலில் வருகின்றார். பின் திருப்பணியாளர், பொதுநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளர் ஆகியோர் பவனியாக வந்து சிலுவைக்கு ஆராதனை செலுத்திச் செல்கின்றனர். முழங்காலிட்டுப் பணிநதோ, இடத்துக்கு ஏற்ப வேறு வகையிலோ - எ.கா.: சிலுவையை முத்தி செய்தல்.

19. ஒரே ஒரு சிலுவைதான் ஆராதனைக்கு வைக்கப்படும். பெருங்கூட்டத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே ஆராதனை செலுத்த முடியாதெனில், திருப்பணியாளர்களும் நம்பிக்கையாளர்களுள் ஒரு சிலரும் ஆராதனை செய்தபின் அருள்பணியாளர் சிலுவையை எடுத்துப் பீடத்தின் முன்பாக நடுவில் நின்றுகொண்டு, சில வார்த்தைகள் சொல்ல அனைவரையும் ஆராதனை செய்ய அழைக்கின்றார். அவர் சிலுவையைச் சிறிது நேரம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்க, எல்லாரும் அமைதியாக ஆராதனை செலுத்துகின்றன''

20. திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, "ஆண்டவரே! யாம்", எனும் பல்லவி, முறைப்பாடுகள், "நம்பிக்கை தரும் சிலுவையே" எனும் பாடல் அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப்படும். அப்போது ஆராதனை செலுத்தி முடித்தவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பர்.

திருச்சிலுவை வழிபாட்டின்போது பாடல்கள்

1, 2: முன்மொழி
ஆண்டவரே, யாம் உமது திருச்சிலுவையினை வணங்குகின்றோம்; உமது புனித உயிர்ப்பையும் புகழ்கின்றோம், மாட்சிப்படுத்துகின்றோம்; ஏனெனில் ஆண்டவரே, இம்மரத்தின் வழியாக இவ்வுலகம் அனைத்துக்கும் மகிழ்ச்சி வந்ததே!

காண். திபா 66:2
கடவுள் நம்மீது இரங்குவாராக! நமக்கு ஆசி வழங்குவாராக!
அவரது முகம் நம்மீது ஒளி வீசுவதாக நம்மீது இரங்குவதாக

1, 2: முன்மொழி மீண்டும் பாடப்படும்: ஆண்டவரே, யாம்.

முறைப்பாடுகள்

பாடகர் குழுவின் ஒரு பகுதியினர் பாடவேண்டியதை 1 எனவும், மற்றொரு பகுதியினர் பாடவேண்டியதை 2 எனவும், இரு பகுதியினரும் சேர்ந்து பாடவேண்டியதை 1, 2 எனவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. சில வாக்கியங்கள் இரு பாடகர்களாலும் பாடப்படலாம்.

1,2: என் மக்கள் இனமே, நான் உனக்கு என்ன செய்தேன், சொல்;
எதிலே உனக்குத் துயர் தந்தேன்?
எனக்குப் பதில் நீ கூறிடுவாய்.

1: எகிப்து நாட்டிலிருந்து உன்னை மீட்டுக்கொண்டு வந்தேனே;
அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தயாரித்தாய்.

1: Hagios 0 Theos (ஹாகியோஸ் ஒ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himals (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.

1,2: நாற்பது ஆண்டுகள் நான் உன்னைப் பாலைநிலத்தில் வழிநடத்தி
உனக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் கொண்டுவந்தேனே:
அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தயாரித்தாய்.

1: Hagios 0 Theos (ஹாகியோஸ் ஓ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himas (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.
இதற்குமேல் நான் உனக்கு என்ன செய்திருக்க வேண்டும்?
எதனைச் செய்யத் தவறிவிட்டேன்?
நான் தேர்ந்தெடுத்த அழகுமிகு திராட்சைச் செடியாக நட்டேனே:
எனக்கு நீ மிகக் கசப்பாய்த் திகழ்ந்தாயே;
தாகம் தீர்க்க நீ எனக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தாயே;
உன்றன் மீட்பர் விலாவினை நீ ஈட்டிகொண்டு துளைத்தாயே!

1: Higios 0 Theos (ஹாகியோஸ் ஒ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himas (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.

பாடகர்கள்
உன்னை முன்னிட்டு நான் எகிப்தை அதன் தலைச்சன் பிள்ளைகளோடு சாட்டையால் அடித்தேனே;
நீயோ என்னைச் சாட்டையால் வதைக்கக் கையளித்தாய்.

1,2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே, நான் உனக்கு என்ன செய்தேன், சொல்;
எதிலே உனக்குத் துயர் தந்தேன்? எனக்குப் பதில் நீ கூறிடுவாய்.

பாடகர்கள்
பாரவோனைச் செங்கடலில் ஆழ்த்தி, எகிப்தினின்று உன்னை விடுவித்தேன்;
நீயோ என்னைத் தலைமைக் குருக்களிடத்தில் கையளித்தாய்!

1, 2: மீண்டும் பாடுவர்:

என் மக்கள் இனமே.

பாடகர்கள்:
நானே உனக்கு முன்பாகக் கடலைத் திறந்தேன்;
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினால் திறந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
மேகத் தூணில் உனக்குமுன் நான் சென்றேனே;
நீயோ பிலாத்தின் முற்றத்துக்கு என்னை இழுத்துச் சென்றாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
பாலைநிலத்தில் மன்னாவால் நான் உன்னை உண்பித்தேனே;
நீயோ என் கன்னத்தில் அறைந்து என்னைச் சாட்டையால் அடித்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
உன் தாகத்தைத் தணிக்க, நலம் தரும் நீரைப் பாறையினின்று உனக்குத் தந்தேனே;
நீயோ கசப்பும் புளிப்பும் கலந்த பானத்தை எனக்குத் தந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
கானான் அரசரை உனக்காக நான் அடித்து நொறுக்கினேனே;
நீயோ நாணல் தடி கொண்டு எனது தலையில் அடித்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
அரசர்க்கு உரிய செங்கோலை உனக்கு நான் தந்தேனே;
நீயோ என் தலைக்கு முள்முடியைத் தந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
உன்னை மிகுந்த ஆற்றலோடு சிறந்த நிலைக்கு உயர்த்தினேனே;
நீயோ என்னைச் சிலுவையெனும் தூக்குமரத்தில் தொங்க வைத்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடல்

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
மாட்சிமிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்;
உலக மீட்பர் பலியாகி வென்ற வகையைக் கூறியே,
சிலுவை அடையாளத்தைப் புகழ்ந்து, வெற்றி முழக்கம் செய்திடுவாய்.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
முதல் பெற்றோரின் குற்றத் தீங்கைக் கண்டு நொந்த இறைவனார்
மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
வஞ்சகன் செய் சூழ்ச்சி அனைத்தையும் சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்
பகைவன் செய்த கேட்டினின்று நன்மை விளையச் செய்யவும்
வேண்டுமென்று நமது மீட்பின் ஒழுங்கில் குறித்து இருந்தது.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
எனவே புனிதக் கால நிறைவில் இறைத்தந்தை மைந்தனை
விண்ணில் நின்று அனுப்பலானார்; அன்னை கன்னி வயிற்றினில்,
உடல் எடுத்துப் பிறந்தாரே மண்ணகத்தைப் படைத்தவர்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ

பாடகர்கள்
இடுக்கமான தீவனத் தொட்டியிலே கிடந்து குழந்தை அழுகின்றார்;
அவரது உடலைத் துகிலில் பொதிந்து சுற்றிவைத்துக் கன்னித்தாய்,
அவர்தம் கையும் காலும் கச்சையாலே பிணைக்கின்றார்.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
முப்பதாண்டு முடிந்த பின்னர் உடலின் வாழ்வு நிறைவுற
மீட்பர் தாமாய் உளம் கனிந்து பாடுபடத் தம்மையளித்தார்;
சிலுவை மரத்தில் பலியாகிடவே செம்மறி உயர்த்தப்படலானார்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
கசந்த காடி அருந்திச் சோர்ந்து, முட்கள், ஈட்டி, ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே,
விண்ணும் மண்ணும், கடலும் உலகும் அதனால் தூய்மை ஆயின.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
வளர்ந்த மரமே, உன் கிளை தாழ்த்தி, விறைத்த உடலைத் தளர்த்துவாய்;
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி, மென்மையாகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின் வருத்தம் தணித்துத் தாங்குவாய்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
மரமே, நீயே உலகின் விலையைத் தாங்கத் தகுதியாயினை
செம்மறியின் குருதி உன்மேல் பாய்ந்து தோய்ந்ததாதலால்
புயலில் தவிக்கும் உலகிற்கெல்லாம் புகலிடம் நீ, படகும் நீ!

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

இறுதி அடி யை ஒருபோதும் விடலாகாது:

தூய மூவொரு கடவுளுக்கு முடிவில்லா மாட்சியே!
தந்தையும் மகனும் தூய ஆவியாரும் சரிசமப் புகழ் பெறுகவே;
அவர்தம் அன்பின் அருளாலே நம்மைக் காத்து மீட்கின்றார். ஆமென்.

குறிப்பிட்ட இடம் அல்லது சிறப்பான மரபுகள் இவற்றுக்கு ஏற்ப, அருள்பணி நலனுக்குப் பொருத்தமானதாக இருந்தால் உரோமைப் படிக்கீதத்தில் காணப்படுவதுபோன்ற ""மைந்தனார் சிலுவை" (Stabat Mater) என்னும் பாடலோ புனித கன்னி மரியாவின் இரக்கத்தை நினைவுபடுத்தும் வேறு பொருத்தமான பாடலோ பாடப்படலாம்.

21. ஆராதனை முடிவுற்றபின் திருத்தொண்டர் அல்லது பணியாளர் ஒருவர் திருச் சிலுவையைப் பீடத்தில் வைக்கும் பொருட்டு எடுத்துச் செல்கின்றார். பீடத்தைச் சுற்றியோ பீடத்தின் மேலோ திருச்சிலுவை அருகிலோ எரியும் திரிகள் வைக்கப்படுகின்றன.

மூன்றாம் பகுதி 

திருவிருந்து

23. பீடத்தின் மீது ஒரு துகில் விரிக்கப்படுகின்றது. திருமேனித் துகிலும் திருப்பலி நூலும் வைக்கப்படுகின்றன. பின் திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - அருள்பணியாளர் தாமே தோள் துகில் அணிந்து, தூயமைமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்துக்குக் குறுகிய வழியாகக் கொண்டு வருகின்றார். அப்பொழுது அனைவரும் அமைதியாக நின்றுகொண்டிருப்பர். இரு பணியாளர்கள் எரியும் திரிகளை நற்கருணையோடு கொண்டுவந்து விளக்குத் தண்டுகளைப் பீடத்தின் அருகிலோ அதன்மீதோ வைக்கின்றனர்.

திருத்தொண்டர் இருந்தால், அவர் தூய்மைமிகு நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்து, நற்கருணைக் கலத்தைத் திறக்கின்றார். அருள்பணியாளர் பீடத்துக்கு வந்து தாழ்ந்து பணிந்து வணங்குகின்றார்.

23. பின் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, தெளிவான குரலில் சொல்கின்றார்:

மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு,
இறைப் படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:

அருள் பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார். அனைவரும் தொடர்கின்றனர்:

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

24. அருள்பணியாளர் மட்டும் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

ஆண்டவரே! தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எ
ங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள் உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்,
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று,
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
மக்கள் ஆர்ப்பரித்து மன்றாட்டை நிறைவு செய்கின்றனர்.

ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.

35. பின் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து அமைந்த குரலில் சொல்கின்றார்:

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே,
நான் உட்கொள்ளும் உம் திரு உடலும் திரு இரத்தமும்
என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல்,
உமது பரிவிரக்கத்தால் என் மனதுக்கும் உடலுக்கும்
பாதுகாப்பாகவும் நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பனவாக.

36. முழங்காலிட்டு வணங்கிய பின், அவர் திரு அப்பம் ஒன்றைக் கையில் எடுக்க
நற்கருணைக் கலத்தின் மீது சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, மக்களை நோக் தெளிவான குரலில் சொல்கின்றார்:

இதோ, இறைவனின் செம்மறி,
இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்.
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.

மக்களோடு சேர்ந்து ஒரு முறை சொல்கின்றார்:

ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்;
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்; என் ஆன்மா நலம் அடையும்.

27. அருள்பணியாளர் பலிப்பீடத்தின் பக்கம் திரும்பி நின்றுகொண்டு, அமைந்த குரலில் சொல்கின்றார்:

கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காப்பதாக.

28. பின் அவர் மக்களுக்கு நற்கருணை வழங்குவார். அப்பொழுது திபா 21 அல்லது பொருத்தமான வேறொரு பாடல் பாடப்படலாம்.

29. நற்கருணை வழங்கிய பின், திருத்தொண்டர் அல்லது வேறொரு பொருத்தமான திருப்பணியாளர் நற்கருணைக் கலத்தைக் கோவிலுக்கு வெளியே தகுதியான இடத்துக்குக் கொண்டு போய் வைப்பார் அல்லது - வேறு வழி இல்லை எனில் - அது நற்கருணைப் பேழையில் வைக்கப்படுகின்றது.

30. பின் அருள்பணியாளர் "மன்றாடுவோமாக" எனச் சொல்கின்றார். தேவைக்கு ஏற்பச் சிறிது நேரம் அமைதியாக மன்றாடியபின், அவர் திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கிறிஸ்துவின் பாடுகளினாலும் புனித இறப்பினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர்; உமது இரக்கத்தால் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இம்மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக முடிவில்லா இறைப்பற்றுடன் வாழ்வோமாக. எங்கள்.

பதில்: ஆமென்.

31. பிரியாவிடை கூறத் திருத்தொண்டர், அல்லது - அவர் இல்லை எனில் - அருள் பணியாளரே "இறை ஆசிக்காகத் தலை வணங்குவோமாக" என அழைப்பு விடுக்கின்றார்.

பின் அருள்பணியாளர் மக்களை நோக்கி நின்றவாறு, அவர்கள்மீது தம் கைகளை விரித்து, பின்வரும் மன்றாட்டைச் சொல்கின்றார்:

ஆண்டவரே,
தங்களது உயிர்ப்பின் நம்பிக்கையில்
உம் திருமகனின் சாவை நினைவுகூர்ந்துள்ள உம் மக்கள் மீது
உமது ஆசி நிறைவாய் இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்:
அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக; அவர்கள் ஆறுதல் அடைவார்களாக;
புனித நம்பிக்கை வளர்வதாக;
நிலையான மீட்பு உறுதி பெறுவதாக. எங்கள்.

பதில்: ஆமென்.

32. எல்லாரும் சிலுவைக்கு முழங்காலிட்டு ஆராதனை செலுத்தியபின் அமைதியாகக் கலைந்து செல்கின்றனர்.

33. கொண்டாட்டத்துக்குப் பிறகு பீடம் வெறுமையாக்கப்படுகின்றது; ஆனால் இரண்டு அல்லது நான்கு மெழுகுதிரித் தண்டுகளோடு பீடத்தின்மேல் சிலுவை இருக்கும்.

34. இச்சிறப்புத் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மாலைத் திருப்புகழைச் சொல்வதில்லை.

======================

Holy Friday in tamil, also known as Good Friday, is the day on which Christians commemorate the crucifixion of Jesus Christ. It is a solemn day of prayer and fasting.

On this day, we remember the great sacrifice that Jesus made for us. We reflect on His suffering and death, and we give thanks for His ultimate act of love. We also ask for God's forgiveness for our own sins.

This day is a reminder of the cost of our redemption. It is a day to reflect on the deep meaning of Christ's sacrifice, and to recommit ourselves to following Him.

About the Author

Hello this is Sam, I am Blogger.

Post a Comment

நன்றி
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.